

ராஞ்சி,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், 249 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோல்விடைந்தது.
இந்த நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சிறந்த சமநிலை இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சிறந்த போட்டி நிலவுவதை நீங்கள் விரும்பவில்லையா? நாங்கள் விரும்புவதும் அதைத்தான். சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாங்களும் அதையே விரும்புகிறோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமமான போட்டி இருக்க வேண்டும் என்று விரும்பினால், அதையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்தப் பந்துவீச்சாளர்கள் நம்முடைய வீரர்கள். அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையும் இதில் முக்கியமானது. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு வருவதற்கு அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள் உழைக்கவில்லை என்று சொல்ல முடியாது. எனவே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமமான போட்டி நிலவினால் அது நல்லதாக இருக்கும். அதன் மூலம் இன்னும் சிறந்த கிரிக்கெட்டையும் நம்மால் பார்க்க முடியும், என்றார்
இருப்பினும், இந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளத்தின் தன்மையை மட்டுமே காரணமாகக் கூற கம்பீர் மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் திறனைப் பாராட்டிய அவர், எதிரணியின் அதிரடி பேட்டிங் வரிசையையும், நிலவிய கடினமான சூழல்களையும் கருத்தில் கொண்டாலும், பெரிய ரன்களைக் குவித்த பிறகு அவற்றைப் பாதுகாத்து வெற்றி பெறுவதற்கான வழியை இந்திய அணி கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.