அவர்கள் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - கெவின் பீட்டர்சன் ஆதரவு


அவர்கள் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - கெவின் பீட்டர்சன் ஆதரவு
x

இந்தியா கண்ட மகத்தான வீரர் விராட் கோலி என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

லண்டன்,

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.

இந்த தோல்விகளுக்கு சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மோசமான பார்ம் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இழந்த பார்மை மீட்க இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அறிவுறுத்தினர்.

அதனால் பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவர்கள் அதிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர். இதில் இவர்கள் இழந்த பார்மை மீட்டெடுக்கும் பட்சத்தில் இந்திய அணி வலுவான நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்கும்.

இந்நிலையில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் தங்களுடைய திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான்கள். 36, 37 வயதாகும் அவர்கள் அற்புதமான பொழுதுபோக்காளர்கள். அவர்களிடம் இன்னும் சில வருடங்கள் இருக்கிறது. விராட் கோலி இந்தியா கண்ட மகத்தான வீரர். இந்த உலகில் வேறு எந்த ஒற்றை பேட்ஸ்மேனும் விராட் கோலியை விட தன்னுடைய நாட்டுக்காக அதிக போட்டிகளை சேசிங் செய்து வென்று கொடுத்ததில்லை. எனவே அவர் பார்முக்கு திரும்பும்போது நன்றாக விளையாடுவார். அவர்கள் இருவரையுமே நான் விரும்புகிறேன்.

2012ம் ஆண்டு நான் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணிக்குள் வந்த போது கொஞ்சம் விமர்சனங்கள் இருந்தது. இருப்பினும் இந்தக் குழந்தை மிகவும் ஸ்பெஷலாக விளையாடப் போகிறது என்று அப்போது நான் சொன்னேன். அதே போலவே தன்னுடைய கெரியர் முழுவதும் அவர் அசத்தினார். அவர் 140 கி.மீ வேகத்தில் நீங்கள் பவுன்சர் வீசினால் நான் சிக்சராக அடிப்பேன் என்ற அணுகு முறையை கொண்டுள்ளார். அந்த வகையில் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ரோகித் சர்மா அப்போது முதல் சிறந்த பேட்ஸ்மேனாகவே செயல்பட்டு வருகிறார்" என்று கூறினார்.


Next Story