

புதுடெல்லி,
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின்(புவி) கம்பேக் எதிர்பார்த்தபடி அமையாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட மயங்க் யாதவ், 4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாகப் பந்துவீசியதன் மூலம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர்.
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் அவரது பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த 3 போட்டிகளிலும் சேர்த்து 12 ஓவர்கள் வீசிய அவர், 139 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.
இந்நிலையில், புவனேஷ்வர் குமாரின் செயல்பாடு மற்றும் 4-வது போட்டியில் அவர் நீக்கப்பட்டது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
“புவனேஷ்வர் குமார் விளையாடிய 3 போட்டிகளிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் அவரது கம்பேக் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அவர் அணியில் இருந்து வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகம், ‘இனி போதும்’ என்று சொல்வது போல தோன்றுகிறது. இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி புவனேஷ்வர் குமாரின் கம்பேக் அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
36 வயதான புவனேஷ்வர் குமார், 2022-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் தேசிய அணியில் இடம்பிடித்த அவர், நியூசிலாந்து தொடரில் தனது திறமையை நிரூபிக்கத் தவறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய கிரிக்கெட்டில் புவியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.