வேகமாக சேசிங் செய்ய இதுதான் காரணம்... டி20 உலகக்கோப்பையிலும் இதேபோல்...- டிராவிஸ் ஹெட்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
வேகமாக சேசிங் செய்ய இதுதான் காரணம்... டி20 உலகக்கோப்பையிலும் இதேபோல்...- டிராவிஸ் ஹெட்
Published on

ஐதராபாத்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் இடைவெளி முடிந்ததும் வேகமாக சேசிங் செய்ய முடிவெடுத்ததாக ஹெட் கூறியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையிலும் ஸ்பின்னர்களை இதேபோல் அடித்து நொறுக்குவேன் என்றும் ஹெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"10 ஓவர்களில் முடித்தது நன்றாக இருந்தது. அபியும் (சர்மா) நானும் இதேபோல சில பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். நல்ல இடத்தில் கவனம் செலுத்தி பந்தை பார்த்து கடினமாக அடித்து பவர் பிளேவை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே எங்களுக்கு திட்டமாகும். ஸ்பின்னர்களை அடிப்பதற்காக என்னுடைய ஆட்டத்தில் கொஞ்சம் வேலை செய்தேன். கரீபியனில் நடக்கும் டி20 உலகக்கோப்பையிலும் அது பெரிய வேலை செய்யும். நவீன கிரிக்கெட்டில் 360 டிகிரியில் அடிப்பது முக்கியம்.

ஆஸ்திரேலிய அணியில் கடந்த 12 மாதங்களாக என்னை பயமின்றி விளையாட சொன்னார்கள். இங்கேயும் அதையே சொன்னதால் நான் பெரிய மாற்றத்தை செய்யவில்லை. கடினமாக உழைத்து ஆழமாக சிந்திக்கக்கூடிய அபிஷேக் சர்மா ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்கிறார். கடந்த சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் அவர் ரன்கள் அடிப்பதை பார்ப்பது நன்றாக உள்ளது. தண்ணீர் இடைவெளியின்போது எங்களுடைய வீரர்கள் வந்து ரன் ரேட்டை பெறுவதற்காக வேகமாக அடிக்குமாறு சொன்னார்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. கடந்த 2 தோல்விகளுக்கு பின் இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவை. அடுத்தப் போட்டியிலும் இங்கே நாங்கள் இதேபோல விளையாடுவோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com