

வெலிங்டன்,
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் கில், சிறப்பாகப் பந்துவீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கில் கூறுகையில், “கடந்த போட்டியிலும் குர்னூர் சிறப்பாகப் பந்துவீசினார். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி அனுபவம் பெறும்போது, அவரது பந்துவீச்சில் இன்னும் துல்லியம் அதிகரிக்கும். இன்றைய போட்டியில் அவரிடம் இருக்கும் திறமையை பார்க்க முடிந்தது” என்றார்.
மேலும், “வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. நியூசிலாந்து அணியை 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியபோது, இந்த இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் சவாலாக மாறியது.
மழை பெய்ய வாய்ப்பிருப்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. கடைசி நேரத்தில் நாங்கள் இழந்த இரண்டு விக்கெட்டுகளை தவிர்த்திருக்க வேண்டும். அந்த விக்கெட்டுகள் தேவையில்லாமல் இழக்கப்பட்டவை. ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் முறையில் நாங்கள் தோல்வியடைந்திருந்தால், அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்திருக்கும். இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி” என்றார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, மழை குறுக்கிட்டபோது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.