

சென்னை,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியின் முடிவில் இலங்கை வீரர்கள், வைபவ் சூர்யவன்சி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் திலக் வர்மா போட்டிக்கு பின் இது குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
"நான் யாருக்கும் பாடம் எடுக்க இங்கு வரவில்லை. ஆனால், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியிடம் இலங்கை வீரர்கள் நடந்துகொண்ட விதம் சரியல்ல. அங்கு சரியாக என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஆட்டத்திற்குப் பிறகு வைபவ் அமைதியாக அங்கிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர்கள்தான் தேவையற்ற வார்த்தைகளை விட்டனர். இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. இத்தகைய சம்பவங்கள் இந்தியா - இலங்கை இடையிலான கிரிக்கெட் உறவுக்கும் நல்லதல்ல" என்றார்.