டி.என்.பி.எல். தகுதி சுற்று 1: இறுதி போட்டிக்கு முன்னேறியது திருப்பூர் தமிழன்ஸ் அணி

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கலில் நடைபெற்று வந்த இந்த போட்டிக்கான டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா - அமித் சாத்விக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் திருப்பூர் அணியின் ரன் வேகம் மளமளவென ஏறியது. முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவர்களில் 56 ரன்கள் அடித்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. துஷார் ரஹேஜா 28 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து கேப்டன் சாய் கிஷோர் களமிறங்கினார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதமடித்த அமித் சாத்விக் 57 ரன்களில் (40 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது அலி 2 ரன்களிலும், சாய் கிஷோர் 33 ரன்களிலும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் சசிதேவ் அதிரடியாக விளையாட திருப்பூர் அணி வலுவான இலக்கை நோக்கி பயணித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. சசிதேவ் 57 ரன்களில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ரஞ்சன் பால் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் தரப்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முடிவில் 16.1 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி பெற்றது. திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து, மதிவாணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.






