

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நத்தத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச் செய்வ தற்கான வாய்ப்பினை வழங்கும் வலுவான அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ளன. அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் பட்டம் வென்றுள்ளன.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு ஐ.பி.எல். கனவு நிறை வேறி வருகிறது. அத்துடன் அவர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட் டால் இந்திய அணிக்கான கதவும் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு.
இந்த நிலையில் 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 கட்டமாக நடக்கின்றன. இதன் முதல் கட்ட ஆட்டங்கள் இன்று முதல் 18-ந் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் வருகிற 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், முன்னாள் சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். 20 லீக் ஆட்டங்கள் நத்தத்திலும், 'பிளே-ஆப்', இறுதிப்போட்டி உள்பட 12 ஆட்டங்கள் சென்னையிலும் நடக்கிறது.
இந்த சீசனை முன்னிட்டு 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 103 வீரர் களை தக்கவைத்து 56 வீரர்களை விடுவித்தது. கடந்த மாதம் நடந்த மினி ஏலத்தில் 57 வீரர்கள் அணிகளால் புதிதாக வாங்கப்பட்டனர். அதிக பட்சமாக சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அஷ்வந்த் வல்தபாவை ரூ.14.45 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீசும், தொடக்க வரிசை பேட்ஸ்மேன் முகிலேசை ரூ.13.70 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்சும் வசப்படுத்தின.
இந்த போட்டியில் ஜெகதீசன், அபிஷேக் தன்வர் (சேப்பாக் சூப்பர் கில் லீஸ்), டி.நடராஜன், சாய் கிஷோர், இசக்கி முத்து (திருப்பூர் தமிழன்ஸ்), ஷாருக்கான், சாய் சுதர்சன், எம்.சித்தார்த் (கோவை கிங்ஸ்), அதியசராஜ் டேவிட்சன், வாஷிங்டன் சுந்தர் (திருச்சி கிராண்ட் சோழாஸ்), தீபேஷ், குர் ஜப்னீத் சிங், பெரியசாமி (மதுரை பாந்தர்ஸ்), அபிஷேக், ஹரி நிஷாந்த் (சேலம் ஸ்பார்ட்டன்ஸ்). முகிலேஷ், சோனு யாதவ் (நெல்லை ராயல் கிங்ஸ்). வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித் (திண்டுக்கல் டிராகன்ஸ்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். இவர்களில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருப்பதால் அவர்கள் இந்த போட்டி தொடரில் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து 20 ஓவர் தொடரின் போது தசைப்பிடிப் பால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரும் ஆடுவது சந்தேகம்தான்.
நத்தத்தில் இன்று இரவு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிரா கன்சை எதிர்கொள்கிறது.
சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன்பால், துஷர் ரஹேஜா, டி.நடராஜன், அமித் சாத்விக், இசக்கிமுத்து உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஷிவம் சிங், சந்தீப் வாரியர், புவனேஷ்வரன் உள்ளிட்ட திறமையான வீரர் கள் அங்கம் வகிக்கின்றனர். இவ்விரு அணிகளும் போட்டியை வெற்றி யோடு தொடங்க ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இவர்கள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் 7-ல் திண்டுக்கல்லும், 4-ல் திருப்பூரும் வென்றுள்ளன.
திண்டுக்கல் கேப்டன் பாபா இந்திரஜித் நேற்று நிருபர்களிடம் கூறுகை யில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது அணிக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் தருகிறது. ஆர்.அஸ்வின் அளித்த பங்களிப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. இப்போது அவர் அணியின் ஆலோசகராக இருப்பது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மாவட்ட மற்றும் கீழ்நிலை தேர்வு போட்டிகளின் மூலம் திறமையான வீரர் களை கண்டறிவதில் கவனம் செலுத்துகிறோம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் கூறுகையில், 'எங்கள் அணியில் வெற் றிக்கு வழிவகுக்கும் பல மேட்ச் வின்னர்களும், அதிரடியாக ரன் குவிக் கும் வீரர்களும் உள்ளனர். முதற்கட்ட போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடுவது நிச்சயம் சாதகமான ஒரு விஷயமாகும். ஏனெனில் இது பயணக் களைப்பை குறைக்கிறது. போக போக ஆடுகளம் மெதுவாக மாற வாய்ப்புள்ளது. இது எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருக்கும்' என்றார்.
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அத்துடன் தமிழ்நாடு பிரிமீயர் லீக் யூடியூப்பிலும் பார்க்கலாம்.