டி.என்.பி.எல். கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அபார வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
Image Courtacy: TNPremierLeagueTwitter
Image Courtacy: TNPremierLeagueTwitter
Published on

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் களம் இறங்கினர்.

சென்னை அணியின் சார்பில் களமிறங்கிய ஜெகதீசன் 4 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய சந்தோஷ் ஷிவ் 14 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பால் 6 ரன்களும், சஞ்சய் யாதவ் 2 ரன்னும், பாபா அபராஜித் 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் சேப்பாக் அணி 61 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களம் இறங்கிய சசிதேவ் மற்றும் ஹரிஷ் குமார் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹரிஷ் குமார் மொஹமதின் ஒவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். அதிரடியாக ஆடிய ஹரிஷ் குமார் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சசிதேவ் 23 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணியின் சார்பில் சச்சின் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சச்சின் 14 (16) ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து சுரேஷ் குமாருடன் சாய் சுதர்ஷன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து சுரேஷ் குமார், சாய் சுதர்ஷன் ஜோடி அசத்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சுரேஷ் குமார் 47 (34) ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் தனது அரைசத்தை பதிவு செய்து அசத்திய சாய் சுதர்ஷன் 67 (43) ரன்களும், ராம் அரவிந்த் 3 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கோவை அணி 16.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரகில் ஷா மற்றும் லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com