டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரைக்கு எதிராக சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மதுரை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரைக்கு எதிராக சேலம் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 26-வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களிலும், சுஷில் 18 ரன்களிலும் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய விஜய் சங்கர் நிலைத்து நின்று ஆடினார். 40 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் சிலம்பரசன் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அரை சதத்தை தவறவிட்டார்.

அணியின் கேப்டன் ஃபெராரியோ, 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் எம்.அஸ்வின் 4 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த அவர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில், சேலம் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அருண் கார்த்திக்(8) மற்றும் சுகேந்திரன்(0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த அனிரூத் சீதாராம் 3 பவுண்டரிகள், 2 சிக்சருடன் நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். 52 ரன்கள் சேர்த்த அவர், லோகேஷ் ராஜ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com