டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் - கோவை கிங்ஸ் மோதல்

mage Courtesy: @TNPremierLeague
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது.
கோவை,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 8 சீசன் முடிந்துள்ளன. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வென்று இருக்கின்றன.
டி.என்.பி.எல்.- ல் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல். கனவு நிறைவேறி வருகிறது. இந்த நிலையில் 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 6-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்தவரான சாய் சுதர்சன் (759 ரன்கள்), ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் இந்த போட்டியை முழுமையாக தவற விடுகிறார்கள்.
நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த கோவை கிங்சை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் திண்டுக்கல்லிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க கோவை அணி வரிந்து கட்டும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர திண்டுக்கல் டிராகன்ஸ் முனைப்பு காட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் 6 முறையும், கோவை 4 தடவையும் வென்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.






