டிஎன்பிஎல் - கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை


TNPL - Madurai register first win by defeating Coimbatore
x

இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடின.

கோவை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கோவை அணியின் தொடக்க வீரர்களாக ஜிதேந்திர குமார் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜிதேந்திர குமார் 17 ரன்னிலும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஷாரூக் கான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் சச்சின் 15 ரன், ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன், மாதவ பிரசாத் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ஷாரூக் கான் உடன் பிரதீப் விஷால் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். நிலைத்து நின்று ஆடிய ஷாரூக் கான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 77 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக ஆடிய பாலசந்தர் அனிருத் 37(28) ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, ராம் அரவிந்துடன் ஜோடி சேர்ந்தார் சத்ருவேத். இருவரும் கோவை அணியின் பந்துவீச்சை சிதறடிக்க, அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ராம் அரவிந்த் 64(48) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 7 (2) ரன்னில் ரன் அவுட்டானார். இறுதியில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மதுரை அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. கடைசி வரை களத்தில் இருந்த சத்ருவேத் 46 (23) ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை மதுரை பதிவு செய்திருக்கிறது.

1 More update

Next Story