சதம் அடித்த ஒரே போட்டியில் 34 இடங்கள் தாவிய டாம் பான்டன்... ஐ.சி.சி தரவரிசையில் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய டாம் பான்டன் 121 ரன்கள் விளாசினார்.
டாம் பான்டன்
Published on: 

துபாய்,

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டாம் பான்டன் 34 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டாம் பான்டன் அதிரடி சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய டாம் பான்டன், 99 பந்துகளில் 121 ரன்கள் விளாசினார். இது அவரது 2-வது ஒருநாள் சதமாகும். இந்த ஆட்டத்தின் மூலம் டாம் பான்டன் தனது சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார். 34 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ள அவர், முதல் 10 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நெருங்கியுள்ளார்.

சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 3-வது இடத்திலும், ரோகித் சர்மா ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி 15 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தையும், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 12 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 15 இடங்கள் முன்னேறி 45-வது இடத்துக்கு வந்துள்ளார்.

X