

லாகூர்,
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பாண்டம் மற்றும் டக்கெட் இருவரும் அதிரடி காட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் குவித்தது. பாண்டம் 74 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இலங்கை பந்துவீச்சை டக்கெட் நாலாபுறமும் சிதறடித்தார். அத்துடன் சதமடித்து அசத்தினார். அவரின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 132 பந்துகளை எதிர்கொண்ட டக்கெட், 24 பவுண்டரியுடன் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் பெர்னாண்டோ அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது.
மெண்டிஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பெர்னாண்டோ 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 89 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். குறிப்பாக, ரதநாயகே அதிரடி காட்டி சதமடித்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்துவிடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த ரதநாயகேவும் 77 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் இலங்கை அணி 45.1 ஓவர்களில் 331 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முதல் இரு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இங்கிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.