முத்தரப்பு தொடர்: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
முத்தரப்பு தொடர்:  இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
Published on

தம்புல்லா,

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று தம்புல்லாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய இந்தியா-ஏ அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை இருவரும் சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் திணறடித்தனர். அதில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்சி, வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து அதே வேகத்தில் விளையாடிய அவர், 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குமார் குஷாக்ரா களமிறங்கி திலக் வர்மாவுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். திலக் வர்மா தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 90 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து குமார் குஷாக்ரா 39 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இறுதிக்கட்டத்தில் நிஷாந்த் சிந்து மற்றும் விப்ராஜ் நிகம் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 44-வது ஓவரில் இந்தியா-ஏ அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து இருவரும் ஸ்கோரை உயர்த்தி வந்தநிலையில், நிஷாந்த் சிந்து 16(18) ரன்களிலும், விப்ராஜ் நிகம் 27(20) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவர்களில் அனுகுல் ராய் அதிரடி காட்ட 39(15), நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா-ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலங்கை-ஏ அணி களமிறங்கியது.

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியில் சமவிக்ரமா , வானுஜ சஹான் மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com