முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்


முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்
x

இப்ராஹிம் சத்ரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சார்ஜா,

ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 ஓவர் கிரிக்கெட் தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் பாகிஸ்தான் தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான் தனது 2-வது ஆட்டத்தில் யுஏஇ அணிக்கு எதிராக வெற்றி கண்டது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் நடந்த 4-வது லீக்கில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. செடிகுல்லா அடல் (64 ரன்), இப்ராஹிம் சத்ரன் (65 ரன்) அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்ற என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறியது. ஹாரிஸ் ரவுப் (34 ரன்), பஹர் ஜமான் (25 ரன்), கேப்டன் சல்மான் ஆஹா (20 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 9 விக்கெட்டுக்கு 151 ரன்களே எடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி, சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், முகமது நபி, நூர் அகமது தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இப்ராஹிம் சத்ரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story