

தோஹா,
யுஏஇ 'ஏ' அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' மற்றும் யுஏஇ 'ஏ' அணிகள் மோதுகின்றன. தோஹாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் தோஹா பார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ 'ஏ' அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ஆர்யான்ஷ் சர்மா 2 ரன்களிலும், அன்ஷ் டாண்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.
இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணியின் ஹர்பிரீத் சிங் பாட்டியா பொறுப்புடன் விளையாடி சதமடித்தார். ஒரு கட்டத்தில் 154/5 எனத் தடுமாறிய யுஏஇ அணியை பாட்டியாவின் ஆட்டம் மீட்டெடுத்தது.
முகமது ஷஹ்தாத் 46 பந்துகளில் 28 ரன்களும், ஈதன் டிசோசா 37 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பசில் ஹமீத் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தீஷ் சூரி ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்தியா 'ஏ' அணியின் பந்துவீச்சில் அர்ஷத் கான் சிறப்பாகச் செயல்பட்டு 10 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்ஷித் ராணா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்ஷ் துபே, ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதன் மூலம் யுஏஇ 'ஏ' அணி 50 ஓவர்கள் முடிவில் 249 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 'ஏ' அணி களமிறங்க உள்ளது.