ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய யுஏஇ கிரிக்கெட் வீரர்.... 15 மாதங்கள் விளையாட தடை

2022-ம் ஆண்டு யுஏஇ அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆசிப் கான்.
ஆசிப் கான்
Published on

துபாய்,

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாதங்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது.

ஊக்கமருந்து

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி, நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின்போது ஆசிப் கானின் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் ‘மெஸ்டெரோலோன்’ எனப்படும் அனபோலிக் ஸ்டீராய்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு 15 மாதங்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. டிசம்பர் 8 முதலே அவரால் மீண்டும் சர்வதேச அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும்.

யுஏஇ அணியில் முக்கிய வீரர்

பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் கான், 2007 முதல் 2014 வரை அந்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பின்னர் 2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார்.

2022-ம் ஆண்டு யுஏஇ அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆசிப் கான், இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் 1,270 ரன்களும், 56 டி20 போட்டிகளில் 1,302 ரன்களும் எடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com