ருதுராஜ் கேப்டன்சியில் தொடர் சரிவை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
ருதுராஜ் கேப்டன்சியில் தொடர் சரிவை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்
Published on

சென்னை,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருதுராஜ் கெய்குவாட் செயல்பட்டு வருகிறார். கெய்குவாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தோனிக்குப்பின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் சென்னை 7 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியுமடைந்து புள்ளிப்பட்டியலில் 5வது இடம் பிடித்தது. இதனால் 2024ம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்குள் சென்னை அணி நுழையமுடியவில்லை.

இதனை தொடர்ந்து 2025ம் ஆண்டும் ருதுராஜ் கெய்குவாட் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவர் கேப்டனாக 5 ஆட்டங்களில் செயல்பட்டார். இந்த 5 ஆட்டங்களில் சென்னை அணி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றிபெற்றது. இதையடுத்து, காயம் காரணமாக கெய்குவாட் தொடரில் இருந்து விலகி டோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனாலும், கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை 14 ஆட்டங்களில் 4ல் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் (10) பிடித்தது.

தற்போது நடப்பு ஐபிஎல் தொடரும் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. தொடர் தோல்வியால் ருதுராஜ் கெய்குவாட் கேப்டன்சி குறித்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எழுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com