15 வயதில் உலக கிரிக்கெட்டை மிரள வைத்த வைபவ் சூர்யவன்ஷி... 6 மாதங்களில் அசாத்திய சாதனைகள்

இளம் வயதிலேயே உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை வைபவ் சூர்யவன்ஷி உருவாக்கியுள்ளார்.
15 வயதில் உலக கிரிக்கெட்டை மிரள வைத்த வைபவ் சூர்யவன்ஷி... 6 மாதங்களில் அசாத்திய சாதனைகள்
Published on

புதுடெல்லி,

ஒரு முழுமையான கிரிக்கெட் வாழ்க்கையில்கூட பலரால் எட்ட முடியாத சாதனைகளை, வெறும் 15 வயதில் படைத்து உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்தியாவின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி.

யு-19 உலகக் கோப்பை

2026 யு-19 உலகக் கோப்பையை இந்தியா வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி முக்கிய பங்காற்றினார். தொடரின் சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்த அவர், யு-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தார். அதே ஆட்டத்தில் 55 பந்துகளில் சதம் விளாசிய அவர், தொடரில் மொத்தமாக 30 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார்.

ஐபிஎல்லை ஆக்கிரமித்த இளம் புயல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், 2026 ஐபிஎல் தொடரை பேட்டிங்கால் ஆக்கிரமித்தார்.

வெறும் 440 பந்துகளில் 1000 ரன்களை எட்டி ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்தார். மேலும், டி20 வரலாற்றில் ஒரே சீசனில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 500 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

4 முக்கிய விருதுகள்

இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 776 ரன்களை குவித்த அவர், ஒரே தொடரில் 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.

ஆரஞ்சு தொப்பி - 776 ரன்கள்

தொடரின் மதிப்புமிக்க வீரர் (MVP)

சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரர்

சூப்பர் ஸ்டிரைக்கர் ஆகிய முக்கிய விருதுகளை அள்ளினார்.

மேலும், ஒரே சீசனில் 72 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்தார்.

இந்தியா 'ஏ' அணியிலும் அதிரடி

ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்தியா 'ஏ' அணியில் வாய்ப்பு பெற்ற வைபவ், அங்கும் தனது அதிரடியை தொடர்ந்தார். சமீபத்தில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். வெறும் 11 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார்.

15 வயதில் உச்சம்

பெரும்பாலான வீரர்கள் 15 வயதில் மாநில அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், வைபவ் சூர்யவன்ஷி உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் இந்தியா 'ஏ' அணியில் சாதனைகளை குவித்து வருகிறார். இவ்வளவு இளம் வயதிலேயே உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுக்குள் இன்னும் எத்தனை உச்சங்களை தொடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com