ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முல்டர்

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
வியான் முல்டர்
Published on: 

செஞ்சூரியன்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வியான் முல்டர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் சரிந்த வங்காளதேசம்

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் 33.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 494 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 403 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியில் மார்கஸ் அக்கர்மேன் 138 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். முல்டர் 178 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் அடித்தார்.

2-வது இன்னிங்ஸிலும் முல்டர் மிரட்டல்

403 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி, முல்டரின் அபார பந்துவீச்சில் சரிந்தது. அவர் 11 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

சிறந்த பந்துவீச்சு

இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரர் பதிவு செய்த சிறந்த பந்துவீச்சு சாதனையை முல்டர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு டர்பனில் கேசவ் மகராஜ் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும், அதே ஆண்டில் கெபர்ஹாவில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

செஞ்சூரியனில் 2-வது சிறந்த பந்துவீச்சு

மேலும், செஞ்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பதிவான 2-வது சிறந்த பந்துவீச்சாக முல்டரின் 7/31 அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு, 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கைல் அபோட் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

6-வது வீரர்

ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 6-வது வீரர் என்ற பெருமையையும் முல்டர் பெற்றுள்ளார்.

இந்த சாதனையை இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஜாக் கிரிகோரி (1920), இங்கிலாந்தின் இயான் போத்தம் (1978, 1980), இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (2016), ஆப்கானிஸ்தானின் நசீர் கான் மரூப்கில் (2026) ஆகியோர் படைத்துள்ளனர்.

குறைந்த பந்துகளில் 7 விக்கெட்டுகள்

மேலும், டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4-வது மாற்று பந்துவீச்சாளராகவோ அல்லது அதற்கு பிறகு களமிறங்கியோ, மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் முல்டர் படைத்துள்ளார்.

அவர் வெறும் 64 பந்துகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு முன்பு, 1950-ம் ஆண்டு டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹக் டெய்பீல்ட் 68 பந்துகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

X