

புது டெல்லி,
அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங் செய்த மோசமான பீல்டிங் தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இன்னிங்ஸின் 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் கேஎல் ராகுல் அடித்த ஒரு 'புல் ஷாட்' , நேராக டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்று கொண்டிருந்த ஷஷாங்க் சிங்கிடம் சென்றது. மிகவும் எளிதான அந்த கேட்ச்சை ஷஷாங்க் பிடிக்கத் தவறினார்.
அவர் கேட்ச்சை விட்டது மட்டுமின்றி, பந்து எல்லைக்கோட்டைத் தாண்டி நான்கு ரன்களாக மாறியது பஞ்சாப் அணிக்கு இரட்டிப்பு அதிர்ச்சியாக அமைந்தது. இதைக் கண்டு பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகுந்த ஏமாற்றமடைந்தார். கேலரியில் இருந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
ஷஷாங்க் சிங் தொடர்ச்சியாக கேட்ச்களை கோட்டை விடுவது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்று கேட்ச்களைத் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
12 ரன்களில் கிடைத்த நல்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கேஎல் ராகுல், பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 200 ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடிய அவர், 152 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெல்லி அணி 264 ரன்கள் எடுத்தது. தற்போது 265 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் ஆடி வருகிறது. ஒரு கேட்ச் எப்படி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்பதற்கு இந்த இன்னிங்ஸ் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.