

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்த அனில் கும்பிளே நேற்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். அனில் கும்பிளேவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு, சச்சின் தெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், தற்போதைய வீரர்களும் வாழ்த்துக்களை டுவிட்டர் வாயிலாக தெரிவித்து இருந்தனர். கிரிக்கெட் ரசிகர்களும் அனில் கும்பிளேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அனில் கும்பிளே பயிற்சியாளராக இருந்த போது கேப்டனாக இருந்த விராட் கோலி, அனில் கும்பிளேவுக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்த்தார். பயிற்சியாளராக இருந்த போது அனில் கும்பிளேவுக்கும் விராட் கோலிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அனில் கும்பிளேவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கும்பிளேவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத விராட் கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். கடந்த ஆண்டு கும்பிளேவின் பிறந்த நாளுக்கு விராட் கோலி டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தது நினைவு கொள்ளத்தக்கது.
அனில் கும்பிளேவை முன்னாள் பந்து வீச்சாளர் என்று மட்டும் குறிப்பிட்டு பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்ததற்கு நேற்று ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து, பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.