மதம் சார்ந்த சர்ச்சை கருத்து; வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்பு.!

கிரிக்கெட் வீரரின் மதம் தொடர்பாக பேசிய சர்ச்சை கருத்துக்கு வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மதம் சார்ந்த சர்ச்சை கருத்து; வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்பு.!
Published on

துபாய்,

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக இருந்தார். போட்டி நிறைவடைந்த பின், மைதானத்தில் வைத்து முகமது ரிஸ்வான் பிரார்த்தனை(நமாஸ்)  செய்தார்.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து  பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ்  தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  மைதானத்தில் இந்துக்கள் முன்னிலையில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்  நமாஸ் செய்ததை, என்னை  பொறுத்தவரையில் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பலரும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல் வந்ததை தொடர்ந்து, தனது கருத்தில் இருந்த தவறை உணர்ந்து கொண்ட அவர், டுவிட்டரில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது, போட்டியின் தாக்கத்தால் நான் எதிர்பாராதவிதமாக அந்த கருத்தை கூறிவிட்டேன். இதன் காரணமாக, பலரது உணர்வுகள் புண்பட்டுள்ளன.

அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது எதேச்சையாக நடந்த தவறு, திட்டமிட்டு செய்யப்படவில்லை.

இனம், நிறம், மதம் ஆகியவற்றை தாண்டி  மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக விளையாட்டு உள்ளது.

இவ்வாறு வக்கார் யூனிஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com