சாதனையை முறியடிக்க வார்னரை தொடர்ந்து விளையாட அனுமதி அளித்திருக்க வேண்டும் - லாரா சொல்கிறார்

தனது சாதனையை முறியடிக்க, டெஸ்டில் 335 ரன்கள் குவித்த வார்னரை தொடர்ந்து விளையாடுவதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் என லாரா கூறியுள்ளார்.
சாதனையை முறியடிக்க வார்னரை தொடர்ந்து விளையாட அனுமதி அளித்திருக்க வேண்டும் - லாரா சொல்கிறார்
Published on

மும்பை,

சமீபத்தில் அடிலெய்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் (நாட்-அவுட்) எடுத்து பிரமாதப்படுத்தினார். டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவரான வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை (400 ரன்) முறியடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில், அதற்குள் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் டிக்ளேர் செய்து விட்டார்.

இது தொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 50 வயதான பிரையன் லாரா நேற்று அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா நிச்சயம் டிக்ளேர் செய்யும் என்பது தெரியும். ஆனால் எனது சாதனையை முறியடிக்கும் முயற்சியாக வார்னரை மேலும் 5 அல்லது 10 ஓவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதி அளித்திருக்க வேண்டும். அவர் அதிரடியாக விளையாடக்கூடிய 20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன். அதனால் 20 ஓவர் கிரிக்கெட் போன்று அடித்து விளையாடி பார் என்று சொல்லி இருக்கலாம். அவ்வாறு வாய்ப்பு வழங்கியிருந்தால் பார்க்க சுவாரஸ்யமாக இருந்திருக்கும். சாதனைகள் என்பதே முறியடிக்கக்கூடியது தானே என்றார். 400 ரன் சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்பு உள்ளது என்று லாராவிடம் கேட்ட போது, இந்தியாவின் ரோகித் சர்மா, 19 வயதான பிரித்வி ஷா ஆகியோரது பெயரை குறிப்பிட்டார். தனக்குரிய நாளாக அமைந்து, ஆடுகளம் நன்றாக இருந்தால் ரோகித் சர்மாவினால் இச்சாதனையை தகர்க்க முடியும். இது போன்ற பெரிய ஸ்கோர் சாதனையை முந்துவதற்கு அதிரடியாக ஆடுவது அவசியம். அந்த வகையில் பிரித்வி ஷாவுக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com