நாங்கள் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்

Image Courtesy: @windiescricket
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.
கயானா,
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர் இரண்டையுமே ஆஸ்திரேலிய அணி முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்னில் டி20 தொடரை முழுமையாக இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், டி20 தொடரில் அடைந்த படுதோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது,
இத்தொடரில் நாங்கள் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஒரு தரமான எதிரணியை எதிர்கொண்டோம், ஆனால், ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை. நாங்கள் எப்போதும் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம். அணியின் பந்துவீச்சு முயற்சியைப் பாராட்ட வேண்டும். ஆனால், அதுவும் எங்களுக்கு கைக்கொடுக்கவில்லை.
மேலும், இது போன்ற நிலைமைகளில் பனியின் தாக்கம் மற்றும் காற்று போன்ற காரணிகளால் சேஸிங் செய்வது எப்போதும் சிறந்ததாக இருந்துள்ளது. டாஸை வெல்வது என்னால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. பந்துவீச்சு பிரிவில் எங்களுக்கு ஓரளவு தெளிவு உள்ளது, நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அதனால் இந்த தோல்வியை மறந்துவிட்டு பாகிஸ்தான் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






