சில விஷயங்களில் நாம் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது: ஸ்மிருதி மந்தனா

இந்திய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சில விஷயங்களில் நாம் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது:  ஸ்மிருதி மந்தனா
Published on: 

ராய்ப்பூர்,

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 69 ரன்களும், அனுஷ்கா சர்மா 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தனர்.

அந்த அணியின் தொடக்க வீராங்கனை கெலிஸ் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். அடுத்து வந்த மோடஸ்டர், 1 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து ஷர்னே மேயர்ஸ்-பிலவட் பிஸா ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் ஷர்னே மேயர்ஸ் 60 ரன்களும், பிலவட் பிஸா 40 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி தொடர்பாக பேசிய இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறியதாவது,

“பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. முதலில் அனுஷ்கா, பின்னர் ஷபாலி, அதன்பிறகு ஹர்மன் என அனைவரும் தங்களுடைய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கினர். அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல், பீல்டிங்கிலும் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினர். இருப்பினும், சில விஷயங்களில் நாம் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அவற்றைத் திரும்பிச் சென்று ஆராய்ந்து, பயிற்சியில் சரிசெய்வோம்.

முதல் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை; டாப் ஆர்டரிலும் எதிர்பார்த்த ஆட்டம் அமையவில்லை. இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை. எனவே, வீரர்களுக்குப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அனுபவமும் கிடைப்பது எப்போதும் நல்லது. அதேபோல், அடுத்தடுத்த போட்டிகளுக்குச் செல்லும்போது ரன்கள் எடுத்த நம்பிக்கையுடன் இருப்பதும் முக்கியம்.

நமது பந்துவீச்சு வரிசை நிச்சயமாகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பனிப்பொழிவு ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியை நெருங்கும் வரை அடுத்த மூன்று போட்டிகளிலும் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, அதற்கேற்ற சரியான அணிக் கலவையைத் தேர்வு செய்ய வேண்டும். அணியில் அதிகமான பந்துவீச்சு வாய்ப்புகள் இருப்பது எப்போதும் நல்லது. நிக்கி, ஷபாலி உள்ளிட்ட வீராங்கனைகள் பந்துவீச்சிலும் தங்களுடைய பங்களிப்பை வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது.

மூன்று போட்டிகளிலும் நாம் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒருநாள் தொடரிலும் இதேபோன்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. இதுகுறித்து அணியாக நாங்கள் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். எனவே, பரோடாவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலும் இதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com