எங்கே சென்றாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - சுப்மன் கில்

Image Courtesy: @IPL
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 90 ரன்னும், சாய் சுதர்சன் 52 ரன்னும் எடுத்தனர்.
கில் - சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தியது. தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 50 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த 2 போட்டிகளைப் (டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிராக) பற்றி நாங்கள் பேசினோம். அதுவே நாங்கள் புள்ளிப்பட்டியலில் எங்கே நிற்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கக்கூடிய போட்டிகளாகும்.
அப்படிப்பட்ட போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சி. நாங்கள் எங்கே சென்றாலும் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நான், சாய் சுதர்சன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் பேட்டிங்கில் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை.
எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடி முடிந்தளவு நிறைய ரன்கள் குவிக்க விரும்புகிறோம். நாங்கள் முன்னிலையில் இருந்தாலும் போட்டியை முடிப்பது முக்கியம். நல்ல அணிகள் போட்டியை நன்றாக முடிக்கும். டி20 கிரிக்கெட்டில் எப்போதும் நீங்கள் கச்சிதமான ஆட்டத்தை விளையாட முடியாது. இன்று கூட நான் கடைசி வரை நின்று இருந்தால் எக்ஸ்ட்ரா 10 ரன்கள் அடித்திருக்க முடியும். அந்த சிறிய குறைகளையும் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் வழியைக் கண்டறிய வேண்டும். அதில் நாங்கள் சிறந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.






