விராட், ரோகித் ஓய்வு பெற வற்புறுத்தப்பட்டார்களா..? கம்பீர் பேட்டி

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் மற்றும் விராட் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவர்களின் விலகல் இந்திய கிரிக்கெட் அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னதாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விராட் மற்றும் ரோகித் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து நீக்க தேர்வுக்குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாக இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை ஓய்வு பெறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- " ஒரு வீரர் விளையாட தொடங்கும் போதும் சரி, அதை நிறைவு செய்ய விரும்பும்போதும் சரி, அது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட முடிவு. இதில் வேறு யாருக்கும் தலையிட உரிமை கிடையாது. பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது இந்த நாட்டில் வேறு யாருக்கும் நீங்கள் இப்போதுதான் ஓய்வு பெற வேண்டும் என கட்டாயப்படுத்த உரிமை இல்லை. இது அவர்களுக்குள் (வீரர்கள்) இருந்து வரும் முடிவுதான்.

ஆம் நாங்கள் 2 மூத்த வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளோம். சில நேரங்களில் இது இளம் வீரர்கள் தங்களுடைய கையை உயர்த்தி விளையாடுவதற்கான வாய்ப்பு என்று நான் நம்புகிறேன். ஆம் இந்த வாய்ப்பு கடினமாக இருக்கும். ஆனால் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்காக வீரர்கள் அங்கே இருப்பார்கள். இந்த கேள்வி ஏற்கனவே என்னிடம் கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com