

கொல்கத்தா,
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேசியதாவது;
"நாங்கள் போதிய அளவு ரன்களை சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்காக இருந்தது. நாங்கள் தொடக்கத்திலும், இறுதியிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மேலும் அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஹெட்மயர் களமிறங்கியது முதலே அதிரடியாக தொடங்கினார். அந்த சமயத்தில் நாங்கள் சிறப்பான நிலையில் இருந்ததாக உணர்ந்தோம். மேலும் மேத்யூ ஃபோர்ட் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோரும் பௌலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் எங்களால் இன்று வெற்றி பெற முடியவில்லை.
சஞ்சு சாம்சன் அருமையான ஒரு ஆட்டத்தை விளையாடினார். ஏனெனில் இதுபோன்ற மைதானத்தில், அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் சேஸிங் செய்யும் போது அது சற்று கடினமாக இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி எதையும் எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சஞ்சு சாம்சன் ஒரு தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் விளையாடிய ஆட்டம் மிகவும் மதிப்பு மிக்கது. ஏனெனில் இன்று அவரது பேட்டிங் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. இன்று அவர் விளையாடிய விதத்தைப் பொறுத்தவரை நீங்கள் அவருக்கு 'ஏ' பிளஸ் ரேட்டிங் கொடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.