

லண்டன்,
ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடை யிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று இரவு நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் 2-0 என இந்திய அணி தோல்வியடைந்தது. தொடர்ந்து 6 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருப்பது,
அயர்லாந்து , இங்கிலாந்து தொடர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான தொடக்கம் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து விளையாடத் தவறினர்.நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை. மேலும் , அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி மாறி மாறி களமிறக்கப்பட்டனர். நிலையான தொடக்க வீரர்கள் தேர்வு செய்யாததும் காரணமாக அமைந்தது.
இந்திய அணி மிடில் ஆர்டரில் அயர்லாந்து , இங்கிலாந்து தொடர்களில் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. முக்கிய நேரங்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்தனர்.
இந்திய அணியினர் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். குறிப்பாக நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 257 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர்.
மேலும் போட்டியில் முக்கிய கேட்ச்களை தவறவிட்டனர். இது இந்திய அணியின் தோல்விக்கான காரணமாக அமைந்தது. இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்திய அணி, ஒரு தொடரை 4-0 என்ற கணக்கில் இழப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக வழிநடத்திய முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாத முதல் இந்திய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் மோசமான சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் தொடர் தோல்விகள் ஜூன் மாத தொடக்கத்தில் இந்திய டி20 கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஷ்ரேயாஸ் மீது பெரும் அழுத்தத்தைக் ஏற்படுத்தியிருக்கிறது.
டி20 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய அணி, தனது முதலிடத்தை இழந்தது. தொடர் வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, இந்திய அணியை முந்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, கடந்த 1,601 நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து ,இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. இந்திய அணியின் செயல்பாட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது என பிசிசிஐ செயலாளர் தெரிவித்தார்.
வருகிற 19-ந் தேதி ஒருநாள் போட்டி தொடர் முடிந்து அணி நாடு திரும்பியதும், இங்கிலாந்து தொடரில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய நாங்கள் இந்திய அணியின் முக்கிய உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்துவோம். அதேசமயத்தில் அவசர கோலத்தில் எந்த முடிவும் எடுக்கமாட்டோம்' என்று தெரிவித்தார்.
இந்திய அணியில் இந்தத் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா , வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பின்னடைவானது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்தின் பேட்டர்களின் ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை.