

ஐதராபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது. ஷாய் ஹோப் 102 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்), ரூதர்போர்டு 49 ரன்களுடனும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். பின்னர் 248 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கீமோபால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தோல்வி தொடர்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,
ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வந்தது. மேலும், பந்து ஓரளவுக்குக் கூடுதலாக எகிறவும் செய்தது. இதை உணர்ந்த பந்துவீச்சாளர்கள், தங்களது திறமைக்கு ஏற்ப செயல்பட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐந்தாவது போட்டி நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இனி பந்துவீச்சைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். முக்கியமானது, திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதும், ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியான மனநிலையுடன் களமிறங்குவதும்தான். அந்த நாளில் கிடைக்கும் வாய்ப்பை உணர்ந்து, அதைச் சரியாகப் பயன்படுத்தி, முக்கியமான தருணங்களில் ஆட்டத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.என தெரிவித்தார்.