“ஏன் இந்த புறக்கணிப்பு?” - ரஜத் படிதார், சஞ்சு சாம்சனுக்காக குரல் கொடுத்த இந்திய முன்னாள் வீரர்

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ரஜத் படிதார்
Published on

சென்னை,

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய டி20 அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்படாதது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் வெற்றி

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான 0-2 தோல்வி, இங்கிலாந்துக்கு எதிரான 0-4 தோல்விக்கு பிறகு, தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெறாதிருந்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ரஜத் படிதார் எங்கே?

இந்நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய டி20 அணியில் ரஜத் படிதார் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் ரஜத் படிதார் எங்கே? ஆர்சிபி அணிக்கு இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், பேட்டராகவும் சிறப்பாக செயல்பட்டார். இருந்தும் அவரை தேர்வுக்கே பரிசீலிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களை தேர்வு செய்திருக்கும்போது, படிதாரை மட்டும் ஏன் புறக்கணித்தார்கள்?" என்றார்.

வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்

மேலும், "தற்போதைய இந்திய டி20 அணியில் பெரும்பாலானோர் இடது கை பேட்டர்களாக உள்ளனர். அதனால் ரஜத் படிதார் அல்லது சஞ்சு சாம்சன் போன்ற வலது கை பேட்டர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். பிரபுசிம்ரன் சிங் அணியில் இருந்தாலும், முதல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனே விளையாடுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்" என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com