ஹர்திக் பாண்ட்யா எந்த அணிக்குத்தான் செல்கிறார்? சென்னைக்கு வருவாரா.? - அஸ்வின் கணிப்பு

ஹர்திக் பாண்ட்யா டிரேடிங் குறித்து அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா எந்த அணிக்குத்தான் செல்கிறார்? சென்னைக்கு வருவாரா.? - அஸ்வின் கணிப்பு
Published on: 

சென்னை,

ஹர்திக் பாண்ட்யாவை டிரேடிங் முறையில் வாங்க 5 அணிகள் முயற்சி செய்து வருகின்றன.

ஹர்திக் பாண்ட்யா

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடியது. ஆனால் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி, கடந்த முறை 9-வது இடத்தையே பிடித்தது. இந்த சூழலில் மும்பை அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே டிரேடிங் முறையில் அவர் வேறு அணிக்கு மாற்றம் செய்யப்படுவார் என பேசப்பட்டு வருகிறது. அவரை டிரேடிங் முறையில் வாங்க சென்னை உட்பட பல்வேறு அணிகள் போட்டியிடுகின்றன.

சென்னை அணியில் ஹர்திக் பாண்ட்யா.?

இதற்கிடையில் ஹர்திக் பாண்ட்யா சென்னை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்றும் சென்னை ரசிகர்கள் மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ரசிகர்கள் கணித்தது போலவே, சென்னை அணி நிர்வாகமும் ஹர்திக் சென்னை அணிக்குள் வருவது போல மறைமுகமாக சுட்டிக்காட்டி ஒரு வீடியோ வெளியிட்டது. அதாவது, அடுத்த அப்டேட் என்ன? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கானை வைத்து சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வெளியிட்டது. அதில், டிரேட் குறித்த அப்டேட் வேண்டும் என கேட்கப்பட்ட கார்டின் கார்னரில், 33 என்ற நம்பர் ரவுண்ட் செய்யப்பட்டது போல் மங்கலாக இருக்கிறது. அது ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி நம்பர் என்றும், சிஎஸ்கேவிற்கு பாண்டியா வரப்போகிறார் எனவும் டிகோட் செய்த சென்னை ரசிகர்கள், அதை வைரலாக மாற்றினர்.

ஆனால் ஹர்திக் பாண்ட்யா சென்னை அணிக்கு வரப்போகிறார் என சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா டிரேடிங் குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது;

5 அணிகள் போட்டி

ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்கக்கூடிய ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும்தான். ஹர்திக்கை வாங்குவதற்கு கொல்கத்தா அணி ஹர்ஷித் ராணா அல்லது ரிங்கு சிங்கை மும்பை அணிக்கு வர்த்தக முறையில் கொடுக்கலாம். மும்பை அணியுடன் பேசி ரஷித் கானைக் கொடுத்துவிட்டு ஹர்திக்கை மீண்டும் வாங்குவதற்கு குஜராத் அணி கூட முயற்சிக்கலாம்.

ஹர்திக் பாண்ட்யாவை வாங்க சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் மட்டுமே முயற்சி செய்து வருகின்றன. புதிய அணிக்குச் செல்லும்போது கேப்டன் பதவி வேண்டும் என்ற நிபந்தனையை ஹர்திக் பாண்ட்யா தற்போது தளர்த்திக் கொண்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி, தனக்கு ஏற்ற ஒரு நல்ல அணியில் ஆடவே அவர் விரும்புகிறார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X