

ஐதராபாத்,
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் சமீபத்தில் தனது ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையாலும் கவனம் ஈர்த்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளாசிய அதிரடி அரைசதம் இந்தியாவை 175 ரன்கள் எடுக்க வழிவகுத்தது. அவரது வேகமான 50 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு, அவரது காதலியாக கூறப்படும் அதிதி ஹுண்டியா சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே, அதிதி தான் அவரது காதலி என உறுதிப்படுத்தியதாகவும், “இஷான் எவரை திருமணம் செய்ய முடிவு செய்தாலும் முழு ஆதரவு உண்டு” என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அதிதி ஹுண்டியா. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ‘மிஸ் டிவா’ பட்டத்தை வென்றார். அதற்கு முன்பு ‘பெமினா மிஸ் இந்தியா 2017’-ல் இறுதி சுற்று வரை சென்றார். மாடலிங் மற்றும் பேஷன் துறையில் கவனம் செலுத்தி வரும் இவர், இன்ஸ்டாகிராமில் 2.85 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட அவர், “சங்கினி” என்ற குழுவின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இவர்களின் திருமணம் குறித்த வதந்திகள் தற்போது அதிகரித்துள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.