சச்சின், விராட் கோலி இருவரில் யாருக்கு பந்துவீசுவது கடினம்..? ஜேம்ஸ் ஆண்டர்சன்


சச்சின், விராட் கோலி இருவரில் யாருக்கு பந்துவீசுவது கடினம்..? ஜேம்ஸ் ஆண்டர்சன்
x

ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை 7 முறை அவுட்டாக்கி உள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் விளையாடிய கால கட்டத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தனது பந்துவீச்சு மூலம் கடும் நெருக்கடி கொடுத்து இங்கிலாந்து அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளார்.

இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சச்சின் தெண்டுல்கரை 9 முறையும், விராட் கோலியை 7 முறையும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அவுட்டாக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சச்சின் மற்றும் விராட் கோலி இருவரில் யாருக்கு பந்துவீசுவது கடினம்? என்பது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "டெஸ்ட் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கரை விட விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும்போது நான் சிரமத்தை சந்தித்துள்ளேன். சச்சின், விராட் கோலி என இருவரையுமே நான் பலமுறை வீழ்த்தி இருந்தாலும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது சவாலான ஒன்று.

கோலி முதல் முறையாக இங்கிலாந்துக்கு வந்தபோது (2014-ம் ஆண்டு) அவருக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தினேன். ஆப் ஸ்டம்புக்கு வெளியே அவரது பலவீனத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அடுத்த முறை நான் அவருக்கு எதிராக விளையாடியபோது (2018-ம் ஆண்டு) வேறு ஒரு வீரருக்கு பந்து வீசுவது போல இருந்தது. அந்த அளவுக்கு என் மீது ஆதிக்கம் செலுத்தினார்.

சச்சினுக்கு எதிராக அந்த மாதிரியான மாற்றம் இருந்ததை நான் உணரவில்லை. கோலியைப் பொறுத்தவரை, நிச்சயமாக இருந்தது. பந்துவீச மிகவும் கடினமான வீரராக கோலியை நான் கண்டேன்" என்று கூறினார்.

1 More update

Next Story