வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்.? பஞ்சாப் - டெல்லி அணிகள் இன்று மோதல்

55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்.? பஞ்சாப் - டெல்லி அணிகள் இன்று மோதல்
Published on

தர்மசாலா,

ஐபிஎல் தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி எப்படி?

பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), 3 தோல்வியுடன் (ராஜஸ்தான், குஜராத். ஐதராபாத் அணிகளுக்கு எதிராக) 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை தொடாத அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று சரிவை சந்தித்துள்ளது.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (4 அரைசதத்துடன் 364 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (4 அரைசதத்துடன் 333), கூப்பர் கனோலி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 377), பிரியான்ஷ் ஆர்யா (286), மார்கஸ் ஸ்டோனிஸ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ் தீப் சிங் (11 விக்கெட்), விஜய்குமார் வைஷாக், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் இன்னும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

டெல்லி பதிலடி கொடுக்குமா?

டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 7 தோல்வி கண்டு 'பிளே-ஆப்' சுற்றை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக முடிந்து போகும். கடந்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் ஜெயித்தது.

பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற முனைப்பு காட்டும். இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் டெல்லி அணி நெருக்கடியின்றி விளையாடும். அத்துடன் பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப் அணியும், 17-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com