ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 4 அணிகள்

பிளே ஆப் தகுதிச்சுற்று 1 போட்டி வருகிற 26-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 4 அணிகள்
Published on

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிய நிலையில், இன்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து ஐ.பி.எல். 2026 பிளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன.

இதன்படி, பிளே ஆப் தகுதிச்சுற்று 1(Qualifier 1) போட்டி வருகிற 26-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். அதே சமயம் தோற்கும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வெல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் எலிமினேட்டர் சுற்று(Eliminater) போட்டி வரும் 27-ந்தேதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். அதே சமயம் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று 1-ல் தோற்ற அணியை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும்.

தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும், தகுதிச்சுற்று 1-ல் தோற்கும் அணியும் தகுதிச்சுற்று 2-ல் மோத உள்ளன. இந்தப் போட்டி வரும் மே 29-ந்தேதி முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com