

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்திய அணியில் 39 வயதான ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 11, 26 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தடுமாற்றத்தை சந்தித்து வரும் அவரது ஆட்டம் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது. காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
தொடரை வெல்ல சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மல்லுக் கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.