பும்ரா விஷயத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் அதிகம் தலையிடாதது ஏன்..? - அக்சர் படேல் விளக்கம்

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை தொடங்கி உள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர்.

இந்திய தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற பவுலர்கள் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த நிலையில் பும்ரா பற்றி பேசியிருக்கும் அக்சர் படேல் கூறியதாவது, பும்ராவின் பந்துவீச்சு குறித்து அணியில் யாரும் அதிகம் பேசுவது கிடையாது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவருக்கு சரியான யோசனை இருக்கிறது. அவர் மிகச் சரியாக இருக்கின்ற காரணத்தினால் எங்களின் பந்து வீச்சு பயிற்சியாளர் அவருக்கு ஐடியா கொடுப்பதில்லை.

உங்களுடைய பந்துவீச்சில் ஏதாவது குழப்பம் இருந்தால் உங்களுக்கு யோசனை சொல்லலாம். ஆனால் பும்ரா மிகத் தெளிவாக இருக்கிறார். இதன் காரணமாக எங்கள் பந்துவீச்சு பயிற்சியாளர் ' உங்கள் மனதில் உள்ளதை செய்யுங்கள். உங்கள் மனம் தெளிவாக இருக்கிறது. எனவே உங்கள் திட்டத்தை களத்தில் செயல்படுத்துங்கள்' என்று மட்டுமே கூறுகிறார்.

பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். நீங்கள் இங்கு தனி ஒருவராக உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். நான் இந்த ஆடுகளத்தில் இரண்டு பந்துகள் வீசியதுமே என்ன நீளத்தில் வீச வேண்டும் என புரிந்து கொண்டேன். பும்ரா மறுமுனையில் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பது பற்றி நான் பார்க்கவில்லை.

நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் மீது அழுத்தம் ஏற்றுக் கொள்வேன். நான் என்னுடைய சிறந்ததை எப்படி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது அதன்படி நான் செயல்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com