ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலியை டெல்லி அணியில் சேர்க்காதது ஏன்..? சேவாக் விளக்கம்


ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலியை டெல்லி அணியில் சேர்க்காதது ஏன்..? சேவாக் விளக்கம்
x
தினத்தந்தி 29 April 2025 10:57 AM IST (Updated: 29 April 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி 18 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் ஏராளமான சாதனைகள் படைத்து வருகிறார்.

இருப்பினும் அவர் புதுடெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த அணிக்காக ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப காலத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியின் அப்போதைய கேப்டனான சேவாக், விராட் கோலிக்கு பதிலாக பிரதீப் சங்வானை தேர்ந்தெடுத்தார்.

ஏனெனில் 2008-ல் நடைபெற்ற ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்த விராட் கோலி, பேட்ஸ்மேனாகவும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஐ.பி.எல். தொடரின் முதல் சீசன் என்பதால் ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாகவே 16 வீரர்களை பதிவு செய்து கொள்ள வழி இருந்தது.

எனவே நிச்சயமாக விராட் கோலியை டெல்லி அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணி அவரை கழற்றிவிட்டது. இருப்பினும் பெங்களூரு அணியில் இணைந்த அவர் தற்போது அதன் அடையாளமாக மாறியுள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலியை டெல்லி அணியில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து சேவாக் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "2008-ம் ஆண்டு எங்களிடம் நிறைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். நான், கம்பீர், ஷிகர் தவான் மற்றும் தில்சன் போன்றவர்கள் இருந்தோம். மேலும் அப்பொழுது எங்களிடம் ஏபி டிவில்லியர்ஸ் இருந்தார். எனவே எங்களுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படவில்லை.

அந்த சமயத்தில் பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேவைப்பட்டனர். எனவே நாங்கள் இடது கை பந்துவீச்சாளரான பிரதீப் சங்வானை தேர்ந்தெடுத்தோம். மேலும் அந்த ஆண்டு நாங்கள் தேர்ந்தெடுத்த பந்துவீச்சாளர்களான பிரதீப் சங்வான் மற்றும் யோ மகேஷ் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டார்கள்" என்று கூறினார்.

1 More update

Next Story