

நகோயா,
20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கால்இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது. தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியிலும் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனால், ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க இலங்கை அணி முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றுமா? அல்லது இலங்கை அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படிகாலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.