

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இருந்து வேறு நகரத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போட்டியை நடத்த முடியாது என டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் குளிர்காலத்தின்போது அதிகரிக்கும் காற்று மாசுபாடு மற்றும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வேறு மைதானத்தில் நடைபெற வாய்ப்பு உருவாகியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கம்
மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைவது கிரிக்கெட் வீரர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெல்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 351 ஆகப் பதிவாகியிருந்தது. இதேபோன்ற மோசமான காற்று மாசுபாடு மீண்டும் ஏற்படக்கூடும் என்பதால் வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற DDCA விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது காற்று மாசுபாட்டின் காரணமாக இலங்கை வீரர்கள் சிலர் மைதானத்திலேயே வாந்தி எடுத்த சம்பவமும் இந்த அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் டெல்லி கிரிக்கெட் சங்கம் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது.