

வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பேசியதாகவும், அந்த உரையாடல் கண்ணாடியில் தன்னையே பார்ப்பது போல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டு வில்லியம்சன் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் சேர்த்து 19,346 ரன்கள், 48 சதங்கள், 6 இரட்டைச் சதங்கள் அடித்த அவர், அந்த அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய வில்லியம்சன், ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் விராட் கோலியுடன் பேசியதை நினைவுகூர்ந்தார்.
அவர் பேசுகையில், “ஓய்வு முடிவை எடுப்பதற்கு முன்பு நான் நெருக்கமான சிலரிடம் பேசினேன். அதில், விராட் கோலியுடன் நடந்த உரையாடல் மிகவும் சிறப்பானது. நாங்கள் இருவரும் கிரிக்கெட்டில் சந்தித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். அப்போது கண்ணாடியில் என்னையே பார்ப்பது போல் இருந்தது.
நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடியது, அணிக்கு கேப்டனாக இருந்தது, குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் பல ஒற்றுமைகள் இருந்தன. எங்களுக்குள் ஒரு தனிப்பட்ட நட்பும் இருக்கிறது. அவருடன் பேசி முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியபோது, என் மனைவியிடம் ‘ஓய்வு பெற இதுவே சரியான நேரம்’ என்று கூறினேன்” என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடக்கும் வாய்ப்பு இருந்தும் ஓய்வு பெற்றது குறித்துப் பேசிய வில்லியம்சன், அந்த மைல்கல் ஒருபோதும் தனது தனிப்பட்ட இலக்காக இருந்ததில்லை என்று தெரிவித்தார்.
“16 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளேன். ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவோ மட்டும் கிரிக்கெட் விளையாடக்கூடாது. விளையாட்டின் மீதான உண்மையான ஆர்வமே தொடர்ந்து விளையாடுவதற்கான காரணமாக இருக்க வேண்டும்.
10,000 டெஸ்ட் ரன்களைக் கடப்பது எனது இலக்காக இருந்ததில்லை. ஆரம்பத்திலிருந்தே அந்த எண்ணிக்கையை மட்டுமே இலக்காக வைத்திருந்தால், இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. சராசரி, சதங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. விளையாட்டின் மீதான உண்மையான ஆர்வமும், அதில் கிடைக்கும் மனநிறைவுமே முக்கியம்” என்று வில்லியம்சன் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 110 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 9,515 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 33 சதங்களும், 6 இரட்டைச் சதங்களும் அடங்கும். 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 485 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.
இந்திய வீரர் விராட் கோலியும் கடந்த 2025-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 123 போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். இருவருமே 10,000 டெஸ்ட் ரன்களை எட்டுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.