பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
Published on

குயின்ஸ்டவுன்,

12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச், ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான சூழ்நிலைக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனைகள் சுசி பேட்ஸ் 36 ரன்னும், கேப்டன் சோபி டிவைன் 31 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சபினேனி மேகனா 37 ரன்னும், யாஸ்திகா பாட்டியா 26 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர், அமெலி கெர், ஹாய்லி ஜென்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி குயின்ஸ்டவுனில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, மேக்னா சிங், ரேணுகா சிங் ஆகியோரின் தனிமைப்படுத்துதல் நியூசிலாந்து அரசின் உத்தரவின் பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியினரின் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகும் இந்த 3 வீராங்கனைகளின் தனிமைப்படுத்துதல் மட்டும் தொடர்வதற்கான காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக 20 ஓவர் போட்டியில் நட்சத்திர வீராங்கனை மந்தனா ஆடவில்லை. முதலாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com