

துபாய்,
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபனா மோஸ்தரி அதிகபட்சமாக 40(42) ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தோனேசியா, வங்காளதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வங்காளதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.