பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் கால்பதித்த இந்தியா

இந்தியா நாளை பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்
Published on

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா அரையிறுதிக்குள் கம்பீரமாக கால்பதித்துள்ளது.

இந்தியா - ஹாங்காங்

8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் ஹாங்காங்குடன் நேற்று மோதியது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

56 ரன்னில் சுருண்டது

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மிகப்பெரிய பலமாக அமைந்தார். அவர் சதம் அடித்து அசத்தினார். வெறும் 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 194 ரன் இலக்கை நோக்கி ஆடிய குட்டி அணியான ஹாங்காங் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 56 ரன்னில் சுருண்டது.

பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

இதனால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை ருசித்தது. தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், நந்தனி ஷர்மா, ஸ்ரீசரனி, பிரேமா ரவாத் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தாய்லாந்தை வீழ்த்தி இருந்த இந்திய அணி அரையிறுதிக்குள் கால்பதித்தது. இந்தியா தனது கடைசி லீக்கில் நாளை பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com