

வதோதரா,
இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி வதோத ராவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 49.5 ஓவர்களில் 197 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலவ்ட் பிசா 62 ரன்கள் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 27.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தனது 3-வது சதத்தை அடித்த பிரதிகா ராவல் 100 ரன்களுடனும் (96 பந்து, 15 பவுண்டரி), ஷபாலி வர்மா 64 ரன்களுடனும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். கேப்டன் மந்தனா 32 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.