மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்; 4 ஆயிரம் ரன்களை கடந்து ஹர்மன்பிரீத் கவுர் சாதனை

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

செஸ்டர்- லீ- ஸ்டிரீட்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுட் 102 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 319 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 305 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 98 ரன் எடுத்தார்.

இந்தியா தரப்பில் கிராந்தி கவுட் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் (84 பந்து, 14 பவுண்டரி) விளாசினார்.

முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை (149-வது ஆட்டம்) கடந்த 17-வது வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இந்திய அளவில் மிதாலிராஜ், மந்தனா ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டியவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com