பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

கேப்டன்ஷிப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் மந்தனா இன்னொரு மைல்கல்லை எட்டும் நிலையில் இருக்கிறார்.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
Published on: 

ராய்ப்பூர்,

இந்தியா- ஜிம்பாப்வே பெண்கள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

இந்தியா- ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் 3 ஆடுகிறது. இதன்படி இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இவ்விரு பெண்கள் அணிகள் இரு நாட்டு தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைதானத்தில் பெண்கள் சர்வதேச போட்டி நடப்பதும் முதல் தடவையாகும்.

ஸ்மிர்தி மந்தனா

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஸ்மிர்தி மந்தனா நியமிக்கப்பட்டார். மந்தனா முழு நேர கேப்டனாக பொறுப்பை ஏற்ற பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டில் கலக்கிய மந்தனாவும், ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்கள். 37 வயதான ஹர்மன்பிரீத் கவுர் ஒரு வீராங்கனையாக தொடருகிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் 3-வது வரிசைக்கு பொருத்தமான பேட்டர் இல்லாமல் இந்தியா தடுமாறுகிறது. அந்த வரிசையில் அனுஷ்கா ஷர்மா அல்லது நிக்கி பிரசாத் ஆகியோரில் ஒருவர் களம் இறங்குவார்கள் என தெரிகிறது.

மைல்கல்

பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, ஸ்ரீசரனி, நந்தனி ஷர்மா மிரட்டுவார்கள். கேப்டன்ஷிப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் மந்தனா இன்னொரு மைல்கல்லை எட்டும் நிலையில் இருக்கிறார். அவர் இன்னும் 133 ரன்கள் எடுத்தால், சர்வதேச பெண்கள் 20 ஓவர் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே பெண்கள் அணி, 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்னும் கத்துக் குட்டிதான். இந்த ஆண்டில் விளையாடியுள்ள 18 இருபது ஓவர் ஆட்டங்களில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. அதனால் அவர்கள் 20 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மந்தனா (கேப்டன்), ஷபாலி வர்மா, அனுஷ்கா ஷர்மா அல்லது நிக்கி பிரசாத், ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், பார்தி புல்மாலி, தீப்தி ஷர்மா, பிரேமா ரவாத், ஸ்ரீசரனி, நந்தனி ஷர்மா, கிரந்தி கவுட்.

ஜிம்பாப்வே: கெல்லிஸ் என்ட்லோவு, பிலவ்ட் பிசா, சிபோ முகெரி திரிபனோ, சிட்ஜா துருரு, கிறிஸ்டின் முடாசா, ஜிவான்ஜூரா, ஜோஸ்பின் என்கோமா (கேப்டன்), மோடஸ்டர் முபாசிக்வா, லோரின் பிரி, குட்ஜாய் சிகோரா, நோம்விலோ சிபாண்டா.

X

Daily Thanthi
www.dailythanthi.com